Friday, July 8, 2011

இவர்களும் சொந்தம் தான்!

நீங்கள் யாராவது ஒரு நகரமே காலியாகிப் போவதை பார்த்திருக்கிறீர்களா?  அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக....?!

அது இப்போது திருப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது.  நாட்டில் வறுமையும், குடும்பச் சுமையும் தலை விரித்தாடும் போதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கையுடன் வாழ்வளித்த திருப்பூர், இப்போது தன் வலிமையை கொஞ்ச கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.

திருப்பூரின் சாய ஆலை பிரச்சினை ஏதோ தொழில் முனைவோருக்கான தனிப்பட்ட பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்த முந்தைய அரசு, தமிழத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் சில குடும்பங்களுக்காவது இந்த ஊர் வாழ்வளித்து வந்தது என்பதை மிகவும் வசதியாக மறந்த்விட்டனர்.  இதில் புதிய வரவாக வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இந்த ஊரில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பலைகள் மிக வேகமாக தமிழகம் முழுவதுமே பரவும் என்பதை அவர்கள் அறியாதது ஆச்சரியம் தான்!

முறை தவறிய காதலர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் மட்டுமல்ல, வாழ்வை நம்பிக்கையுடன் துவக்கப்போகும் இளைஞர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த இந்த நகரம் இப்போது அடைக்கலமின்றி களையிழந்து வருகிறது.

வீடு கிடைக்காமல் அலை மோதிய மக்கள் இருந்த நிலை மாறி வாடகை வீடுகள் காலியாக இருக்கிறது.  சாலைகளில் எப்போதும் நெருக்கமாக காணப்பட்ட வாகன நெருக்கம் இன்று முற்றிலுமாக இல்லை.

ஊரைக் காலி செய்துவிட்டு வேனில் ஏறியபின் ஏக்கப்பெருமூச்சுடன் அவர்கள் தாம் இதுநாள் வரை வாழ்ந்த நகரை கண்களில் ஈரம் கசிய பார்க்கும் பார்வை ஆயிரம் கதைகளை சொல்கிறது.  சொந்த ஊரை நோக்கி ஏதோ ஒரு திசையில் பயணிக்கப் போகும் அவர்களுக்கு மிச்சம் மீதியுள்ள நட்புக்கள் பிரியாவிடை கொடுத்தனுப்பும் போது இந்த ஊரில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சுவடுகள் மேலும் ஆழமாய் பதிகிறது.

இங்கிருந்த சில வருடங்களில் முளைத்த நிறைய புதிய உறவுகளும், அதன் வழிதோன்றல்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களின் இந்நகர அனுபவங்களை செவிவழியாக  சொல்லிக் கொண்டே இருப்பர் எனலாம்.

இங்குள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு வருகிறதோ, இல்லையோ, ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு என்றென்றும் நிரந்தரம்.   இவர்களும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள் தான்!

No comments:

Post a Comment