Thursday, October 18, 2012

தினமணியின் ஆமைகள்

இல்லாமை, இயங்காமையால் தான் வந்தது!  அதாவது, சரியான திட்டங்கள் இல்லாமையால்!  ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை முதலில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மட்டுமாவது எளிய தவணை கடன் திட்டம் மூலம் கொண்டு சென்றிருந்தாலே ஓரளவு பற்றாக்குறையை சரி செய்திருக்கலாம். 

ஒரு இன்வெர்ட்டர் வாங்க 17000 ரூபாய் தேவைப்படும்.  அதுவே, அதற்கு சமமான கொள்ளளவு கொண்ட ஒரு சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனத்தை நிறுவு செலவுடன் அமைக்க 27000/- மட்டுமே தேவைப்படும்.  அதையே எளிய கடன் தவணை திட்டத்தில் கொடுத்தால், இரண்டாவது லட்டு தின்ன கசக்கவா செய்யும்? (மின் கட்டணம் மிச்சம் அல்லவா?)

இது கூடவா தெரியாது தினமணிக்கு?  ஆதரிக்கலாம்.., ஆனால் கண்ணை மூடிக்கொண்டெல்லாம் ஆதரிக்கக்கூடாது. 
படித்தவர்கள் அதிகமாகிஇருப்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.

Friday, July 8, 2011

KURINJI: இவர்களும் சொந்தம் தான்!

KURINJI: இவர்களும் சொந்தம் தான்!

இவர்களும் சொந்தம் தான்!

நீங்கள் யாராவது ஒரு நகரமே காலியாகிப் போவதை பார்த்திருக்கிறீர்களா?  அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக....?!

அது இப்போது திருப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது.  நாட்டில் வறுமையும், குடும்பச் சுமையும் தலை விரித்தாடும் போதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கையுடன் வாழ்வளித்த திருப்பூர், இப்போது தன் வலிமையை கொஞ்ச கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.

திருப்பூரின் சாய ஆலை பிரச்சினை ஏதோ தொழில் முனைவோருக்கான தனிப்பட்ட பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்த முந்தைய அரசு, தமிழத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் சில குடும்பங்களுக்காவது இந்த ஊர் வாழ்வளித்து வந்தது என்பதை மிகவும் வசதியாக மறந்த்விட்டனர்.  இதில் புதிய வரவாக வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இந்த ஊரில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பலைகள் மிக வேகமாக தமிழகம் முழுவதுமே பரவும் என்பதை அவர்கள் அறியாதது ஆச்சரியம் தான்!

முறை தவறிய காதலர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் மட்டுமல்ல, வாழ்வை நம்பிக்கையுடன் துவக்கப்போகும் இளைஞர்களுக்கும் அடைக்கலம் கொடுத்த இந்த நகரம் இப்போது அடைக்கலமின்றி களையிழந்து வருகிறது.

வீடு கிடைக்காமல் அலை மோதிய மக்கள் இருந்த நிலை மாறி வாடகை வீடுகள் காலியாக இருக்கிறது.  சாலைகளில் எப்போதும் நெருக்கமாக காணப்பட்ட வாகன நெருக்கம் இன்று முற்றிலுமாக இல்லை.

ஊரைக் காலி செய்துவிட்டு வேனில் ஏறியபின் ஏக்கப்பெருமூச்சுடன் அவர்கள் தாம் இதுநாள் வரை வாழ்ந்த நகரை கண்களில் ஈரம் கசிய பார்க்கும் பார்வை ஆயிரம் கதைகளை சொல்கிறது.  சொந்த ஊரை நோக்கி ஏதோ ஒரு திசையில் பயணிக்கப் போகும் அவர்களுக்கு மிச்சம் மீதியுள்ள நட்புக்கள் பிரியாவிடை கொடுத்தனுப்பும் போது இந்த ஊரில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சுவடுகள் மேலும் ஆழமாய் பதிகிறது.

இங்கிருந்த சில வருடங்களில் முளைத்த நிறைய புதிய உறவுகளும், அதன் வழிதோன்றல்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களின் இந்நகர அனுபவங்களை செவிவழியாக  சொல்லிக் கொண்டே இருப்பர் எனலாம்.

இங்குள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு வருகிறதோ, இல்லையோ, ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு என்றென்றும் நிரந்தரம்.   இவர்களும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள் தான்!

Thursday, September 30, 2010

ஒரு நீதிமன்ற தீர்ப்பும், அரசுத் துறையின் முன்னெச்சரிக்கையும்

ஒரு வழியாக ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பு வந்து விட்டது.  தீர்ப்பை பற்றி நாம் சொல்வதற்கு  ஒன்றுமில்லை.  ஆனால் இந்த தீர்ப்பு பற்றிய பரபரப்பை கடந்த 15 நாட்களாகவே மக்களை ஜுரம் போல் தொற்றிக்கொள்ள வைத்துவிட்டன - மீடியாக்களும், மத்திய மாநில அரசுகளும்.

நாட்டில் 70 % மக்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில் இருப்பவர்கள் தான்.  இவர்களையே தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு அது என்ன என்று கூர்ந்து  கவனித்து அதைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கு விட்டு விட்டது.  அது மட்டுமா..  இன்று மட்டும் சுமார் 1 .5 லட்சம் லாரிகள் தங்கள் இயக்கத்தை நிறுத்திவிட்டன.  தீர்ப்பு வரும் வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்கிக் கிடந்தவர்கள் எத்தனை பேர்?

தீர்ப்பு வந்தவுடன் எல்லோருக்கும் ஒரு நிம்மதி வந்துவிட்டது.  நிச்சயமாக கலவரம், அசம்பாவித சம்பவங்கள் நடக்காது என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. 70 % மக்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளை பார்ப்பார்கள் என்று நம்பலாம்.  ஆனால் மீடியாக்களுக்குத் தான் பாவம் 'சப்' என்று போய் விட்டது. 

முன் ஏற்பாடுகள் விஷயத்தில் நாம் மத்திய மாநில அரசுகளை பாராட்டியே தீர வேண்டும். கடந்த இரு வாரங்களில் bulk SMS களுக்கு தடை ஏற்படுத்தியும்(Force), வதந்திகளை நம்ப வேண்டாம்  என்று அறிவுறுத்தியும் (advice), போலீஸ்  
உபகரணங்களைக் கொண்டு  பயம் ஏற்படுத்தியும் (threatening) நன்றாக
நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தன.

இந்த தீர்ப்பால் உளவுத் துறையும் காவல் துறையும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் பதட்டமான பகுதிகளில் நடக்க வாய்ப்பிருக்கிறது -  இதை தூண்டும் குறும்புக்கார பயல்களும், மத வெறி பிடித்த பாசக்கார பயல்களும் இருக்கும் வரை.

தம்மாத்துண்டு இடமான 2 .5 acres க்கு சுமார் 110  கோடி மக்கள் தொகை ஒரு கொண்ட தேசம்  60 ஆண்டுகளாக ஒரு தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.

அது சரி.. தீர்ப்பு வரும் நேரம் மின்சாரத்தை ஏன் துண்டித்தார்கள்? டி.வி.யை மக்கள் பார்க்க கூடாது என்று எண்ணத்திலா?  

தீர்ப்பு..?  அதை செய்தி சேனல்களிலும் நாளை தினசரிகளிலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Wednesday, September 22, 2010

தூக்கு தண்டனை

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை நிறை வேற்றும் நாளை அறிவித்துள்ளது நீதிமன்றம்.  சிலருக்கு சந்தோஷமும் சிலருக்கு துக்கமும் இருக்கும் .  அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நம்பி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் அல்லக்கைகள் இனியாவது தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைத்து அடக்கி வாசிப்பது நல்லது.

Monday, August 30, 2010

உண்மையில் தண்டனை யாருக்கு???

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவருக்கு உச்ச நீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காலம் கடந்த தீர்ப்பு என்று கொலை செய்யப்பட ஒரு மாணவியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆனால் அவர்கள் தூக்கில் போடப்படுவார்களா அல்லது ஏற்கனவே காத்திருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் பட்டியலில் அவர்களும் சேர்ந்து காத்திருப்பார்களா என்பது தான் இப்போதைய கேள்வி.

நம் அரசாங்கத்தின் இப்போதைய செயல் படாத நிலையை வைத்து பார்க்கும் போது அவர்கள் இன்னும் சில வருடங்கள் (??) உயிருடன் இருக்கப்போவது உறுதி. அவர்களுக்கு என்ன.. உயிருடன் இருந்தாலும் அல்லது போய் சேர்ந்தாலும் இரண்டும் ஒன்று தான்.  ஆனால் அவர்களின் குடும்பத்தவர்கள் அனு தினமும் அல்லவா செத்து கொண்டிருப்பார்கள்.  அதற்கு அந்த அரசியல் கட்சிக்காரர்களால் என்ன தர முடியும் - பணத்தைத் தவிர...

வாங்க பாஸ்.. நம்ம இதெல்லாம் மறந்து போகிறது சகஜம் தானே...!!!!

ஒரு வழியாக இன்று அந்த "சிறப்பு தூதர்" வெளியுறவு செயலர் நிருபமா ராவ் என்பதும் அவர் இன்றே இலங்கை செல்வதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.

அவர் "இங்கு நாம் நலம் - அங்கு அவர்கள் அனைவரும் நலமே" என்று தி.மு.க. தலைவர் சொல்லிக்கொடுத்ததை திரும்ப வரும் போது சொல்லப்போகிறார்.

500 கோடி ரூபாயுடன் மேலும் ஒரு ரூபாய் சேர்த்து இலங்கை அரசு மிகவும் பெருந்தன்மையுடன் தமிழ் மக்களின் மீள் குடியிருப்பு பணிகள் அனைத்தையும்  திறம்பட நடத்துவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழர்கள் அனைவரும் தத்தமது புதிய குடியுருப்புகளுக்கு சென்று விடுவார்கள் என்றும் அவர் சொல்லாவிட்டாலும் கூட நாம் நம்புவோமாக..  ஏனென்றால் நாம் தான் எல்லாவற்றையுமே சீக்கிரம் மறந்துவிடுவோமே...!!!