இலங்கையில் நிவாரணப்பணிகளை கண்காணிக்க(?) சிறப்புத் தூதர் ஒருவரை அனுப்ப தி. மு. க அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய காங்கிரஸ் அரசு ஒருவழியாக முடிவெடுத்துள்ளது.
முதலாவதாக கவனிக்க வேண்டியது - தி. மு. க அரசின் நிர்ப்பந்தம். அது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான நிர்பந்தம் என்று நாம் நினைத்தால் அது அப்பாவித்தனம். சட்டப்பேரவை தேர்தல்களுக்கான அடித்தளம் என்பது அப்பாவிகளுக்குக்கூட தெரியும்.
போர் முடிந்து ..மன்னிக்கவும்.... படுகொலைகள் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான பிறகு ஜூலை 17 ந்தேதி தமிழர்களின் மீள் குடியிருப்பைப் பற்றி கவலை வந்து ஒரு கடிதம்(!!!!) எழுதுகிறார் தமிழக முதல்வர். அந்த கடிதத்திற்கு ஜூலை 23 ந்தேதி பிரதமர் பொத்தாம் பொதுவாக (சர்வ வல்லமை படைத்த) ஒரு தூதர் ஒரு மாதத்தில் அனுப்பப்படுவார் என்று பதிலளிக்கிறார்.
பின்னர் சாவகாசமாக ஒரு மாதம் முடிந்த பின்னர் ஆக. 19 அன்று வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்தித்து விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அந்த சிறப்புத் தூதர் அனுப்பப் படுவார் என்கிறார்.
அடுத்த மாதமும் இதே பதிலை சொல்வார்கள் என்று நாம் நம்பினால் அது நமது அறியாமை. வழக்கம் போல் நாம் அதை அடுத்த மாதத்திற்குள் மறந்து விட்டிருக்க வேண்டும்.
சரி.. இலங்கைக்கு அனுப்பப் போகும் தூதர் என்ன தேவ தூதரா? அவர் ஒருவர் இலங்கைக்குப் போனால் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சுபிக்ச முக்தி அடைந்துவிடுவார்களா??? அவருக்கு தமிழர்களின் உண்மையான நிலை / மன நிலை / எதிர்பார்ப்பு தெரியுமா? யார் போகப்போகிறார் என்று அறிவிப்பதில் கூட என்ன குழப்பம்??
அவர் போன அன்றோ அல்லது மறுதினமோ எல்லோருக்கும் புது வீடு / புத்தாடைகள் / மூன்று வேளை நிரந்தர உணவு கிடைத்துவிடுமா?? அல்லது ராஜபக்ஷே "தமிழ் வாழ்க" என்று முழக்கமிட போகிறாரா??
மொத்தத்தில் நடக்கப்போவது எல்லோருக்கும் தெரிந்ததே.. முதலில் ஒரு விருந்து நடக்கும். அதில் அந்த தேவ தூதர் நன்கு கவனிக்கப்படுவார். முள் வேலி தமிழர்கள் அனைவரும் எந்த குறையுமில்லாமல் இந்திய உதவியுடன் நலமாக இருப்பதாக ராஜபக்ஷே அவரை நம்ப வைப்பார். அதை நிரூபிக்க சீன உதவியுடன் கட்டப்பட்டு வரும் பல திட்டங்களை அவருக்கு ஹெலிகாப்டரில் சென்று காட்டிவருவார். மீண்டும் விருந்து முடிந்தவுடன் இருவரும் பொது அறிக்கை விடுவார்கள்.
அப்போதோ அல்லது அதற்கு முன்னரோ சி. தூதர் ஏதாவது விளக்கம் கேட்டாலோ அல்லது குடைய ஆரம்பித்தாலோ ராஜபக்ஷே அவரை பகிரங்கமாக மிரட்டுவார். சி. தூதரும் 'அது சும்மா ஜோக்" என்று மீடியாக்கள் முன்பு வழிவார்.
இது போன்ற சரித்திர புகழ் வாய்ந்த முடிவுகள் இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல.. மாவோயிஸ்டுகள், காஷ்மீர், விலைவாசி.. இப்படி எல்லாவற்றிலுமே "௦பூஜ்யம்" முடிவுகள் தான்.
அதனால் தான் நம் பாரத பிரதமர் சிறந்த நிர்வாகி என்று உலக நாடுகளிடம் பெயர் பெற்றிருக்கிறார். இந்த qualifications இருந்தாலே போதும்.. யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகிவிடலாம் போலிருக்கிறதே!!!!
No comments:
Post a Comment